இடைத்தேர்தலில் பா.ஜவுக்கு அதிமுக அழைப்பு

சென்னை : ”இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிக்கு பணியாற்றுவோம்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் நடக்கும், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான, தே.மு.தி.க., – பா.ம.க., தலைவர்களை சந்தித்து, அ.தி.மு.க., வேட்பாளருக்கு, அமைச்சர்கள் ஆதரவு கோரினர். ஆனால், பா.ஜ., நிர்வாகிகளை யாரும் சந்திக்கவில்லை. இது, பா.ஜ.,வினரிடம், அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சென்னையில் உள்ள, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகம் சென்றார். அங்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்தார். 

அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினார். இது குறித்து, பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது: இரண்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்யும் வகையில், மிக தீவிரமாக செயல்பட உள்ளோம். பா.ஜ., முழு ஆதரவை தர வேண்டும் என, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், எங்களின் அகில இந்திய தலைமையை, பல முறை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். 

‘தமிழக பா.ஜ., சார்பில், யாரெல்லாம் பிரசாரத்திற்கு வர உள்ளனர்’ என்ற விபரங்களை கேட்க, அமைச்சர் ஜெயகுமார் வந்திருந்தார். ஏற்கனவே இருக்கிற கூட்டணி என்பதால், எவ்வித பிசிறும் இல்லாமல் பேச்சு நடந்தது. பா.ஜ., சார்பில், யாரெல்லாம் பிரசாரத்திற்கு செல்வர் என்ற பட்டியலை, விரைவில் கொடுப்போம். அ.தி.மு.க., சார்பில், எவ்வித கருத்து வேறுபாடும் சொல்லப்படவில்லை; நாங்களும் சொல்லவில்லை. விக்கிரவாண்டியில், தி.மு.க., தோற்கடிக்கப்பட்டாக வேண்டும். நாங்குநேரியில், காங்கிரஸ் துடைத்தெறியப்பட வேண்டும். அதை உறுதிப்படுத்த, நாங்கள் செல்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *